Monday, April 23, 2012

நீர் தேவதை....



நிறம் களைந்த 
வண்ணத்துப் பூச்சியாய்
படிப்படியாக குளம்
நோக்கி இறங்குவாள்...

பாசி படிந்த
படிகளின் பச்சையம்
படர கால் வைப்பாள்...

நீரை கால் நனைக்கும்,
குளிர்ந்து போகும்...

குளிர்கிறது என்பாள்
கல் விழுந்த நீராய்
சலசலக்கும் குளம்...

ஒரு மனம் கொத்தி
நீர் கொத்த வருகிறது என்ற
சற்றுமுன்னர் செய்தியை
குள அலைகள் ஓலி பரப்பும்...

மீன்கள் கூடும்..
மாநாடோ என்று
வட்டமிடும்...
கொஞ்சி தீர்க்கும்
ஆதவன் கண்படா
கள்ள இடங்களில்
கடித்து வைக்கும்...

வலி படர
கால் மாற்றி
நீர் உதைப்பாள்...
நீர் துளிகள் நடனமாடும்...
அழுகு கரைய
நீர் அலையாகி
கரை நனைக்கும.
சிவந்து நிறமாறும்...

கலங்கிய நீரை
கள்ளாக்கி விட்டு
மேலெழுவாள்...

சொட்ட சொட்ட
அழகு வடிய
காயம் பட்ட
கால்கள் படியேறும்...

போதையில்
மீன்கள் பின்னாலேயே வரும்...

வர்ணனை
போதும் என்று
என்னிடம் கண் சிமிட்டுவாள்

பாதி அழகை ஆழத்தில்
விட்டு விட்டாய் என்று
குளத்தில் குதிப்பேன்..

மீன்கள் போருக்கு தயாராகும்....



- Jeyan M R

Wednesday, April 18, 2012

ஜெயனின் தலைப்புகள்....: தொடர்கதை....

ஜெயனின் தலைப்புகள்....: தொடர்கதை....

தொடர்கதை....

எனது தொடர்கதையும் நீங்கள் படிக்கலாம். தொடந்து படிக்க கீழே குறிப்பிட்டுள்ள  முகபுத்தக(Facebook) முகவரியை சொடுக்குங்கள்   (available in my notes)... தொடர்ந்து எழுதியுள்ள குறிப்பு பகுதியில் வாரம் வாரம் நீங்கள் என் தொடர்கதையை படிக்கலாம்....




thanks all...

Jeyan M R

Wednesday, April 4, 2012

முற்றத்து ஒற்றை மரம்...



எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்வது அதன் நிழலில்தான். அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு கோபம் இருந்தது. அம்மாவிற்கு கோபம் வரும் பொழுதெல்லாம் என்னை அடிப்பதற்கு கையில் எதாவது குச்சி கிடைக்காதா என்று தேடும்பொழுது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பது அந்த முற்றத்து  வேம்பு மரக் குச்சிதான். குச்சி கையில் கிடைத்து விட்டால் அவ்வளவுதான் முட்டிக்கு கீழ் வீங்கிவிடும்.

இதற்காகவே நான் என்ன செய்தேன் தெரியுமா? கைக்கெட்டும் கிளைகளை எல்லாம் அம்மாவிற்கு தெரியாம வெட்டி விட்டேன். அதற்கும் குச்சி சிதற சிதற வாங்கி இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் அந்த மரம் எங்களுக்கு பண்டிகை நாட்களில் ஊஞ்சல் கட்டவும் ஏறி இறங்கி கண்ணாமூச்சி ஆடவும், கூட்டாஞ்சோறு ஆக்கவும் வீடுபோல் இருந்திருக்கிறது அந்த மரம். அம்மை நோய் வந்து படுத்த பொழுது அதன் கிளைகள்தான் எனக்கு  படுக்கையாக்கியிருக்கிறாள் என் தாய். எனக்கு அப்பொழுது தெரியவில்லை. அந்த மரத்தின் அருமையும் என் தாயின் அருமையும்.

ஏன் எனக்கு மட்டுமா நீ அம்மா, என் தம்பிக்கும்தானே? ஏன் பிறகு தம்பி மேல் கோபப்படுவதுமில்லை தம்பியை கண்டிப்பதுமில்லை. அவன் செய்யும் குறும்புகளுக்கெல்லாம் என்னை அடிப்பது ஞாயமா? என்றெல்லாம் பலமுறை மனதிற்குள்ளே திட்டியிருக்கிறேன். என் நண்பர்களின் அம்மாக்கள் எவ்வளவு தங்கள் பிள்ளைகளிடம் எவ்வளவு பாசமா நடந்து கொள்கிறார்கள். எல்லார் வீட்டிலும் அப்பாதான் கண்டிப்பாக இருப்பார்கள், அம்மா பாசாமாகத்தானே இருக்கிறார். ஏன் எனக்கு மட்டும் தலை கீழாக நடக்கிறது.

எனக்கு அப்பா மட்டும் இல்லை என்றால், அவர் நான் கேட்கும் அனைத்தும் வாங்கி கொடுக்கவில்லை என்றால் நான் என்ன ஆயிருப்பேன்?! சின்ன வயதில் விவரம் தெரியாத வயதில் பலமுறை எண்ணியிருக்கிறேன்.

அந்த வயதில் எனக்கு அம்மாதான் எதிரியாக தெரிந்தாள். அம்மா என்றால் பாசம் என்று சொல்வதெல்லாம் பொய். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வதெல்லாம் பொய். கறுப்பு நிறத்தில் ஒரு குட்டி சாம்பல் நிறத்தில் ஒரு குட்டியாக இருந்தாலும் தாய்க்கு எல்லாம் சமம் என்று சொல்வதெல்லாம் பொய். பள்ளிக் கூட தமிழ் புத்தகத்தின் மேல் கோபம் வந்தது எனக்கு. அந்த கோபம், தமிழின் மேல் இருந்த பாசத்தை கொஞ்ச கொஞ்சமாக போக்கியது. அந்த பாடத்தில் மட்டும் தோல்வியுற ஆரம்பித்தேன்.

நான் தமிழிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பாடமாக தோற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் என் தம்பி என்னை முந்திக் கொண்டு சென்றான். ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே வகுப்பில் அமர வேண்டிய சூழ்நிலை உருவானது. எனக்கு என் அப்பாவை தவிர யாரையும் பிடிக்கவில்லை.  பள்ளி கூட நேரங்கள் தவிர, அப்பா வீட்டிற்கு வரும் வரை மரத்தின் கிளையிலேயே கிடந்தேன். மாலையானால் தம்பி வீட்டிற்குள் படிக்கும் சத்தமும், அம்மா என்னை திட்டும் சத்தமும் கேட்டும்.

"இன்று அவன் அப்பா வரட்டும் ஒரு முடிக்கு வரணும், ஏன் இவன் இப்படி இருக்கிறான்", என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அன்று பெரிய பஞ்சாயத்தே நடத்திவிட்டாள் என் தாய். நான் விடிய விடிய அழுதேன். அதன் பிறகு என் அம்மா என்னை அடிக்க வந்தால் கையில் இருக்கும் குச்சியை பிடிங்கி வீசினேன். அதையும் மீறி அடிக்க வந்தால் நான் திருப்பி திட்ட ஆரம்பித்தேன். அந்த மரத்தின் கிளைகளில் ஓலையால் ஆன ஒரு சின்ன குடிசையை கட்டி விடுமுறை நாட்களில் அங்கே படுக்க ஆரம்பித்தேன்.

பள்ளிக்கூட படிப்பு முடியும் பொழுது அப்பாவிடம் சொன்னேன், "எனக்கு இந்த ஊர் வேண்டாம் அப்பா... வெளியே சென்று படிக்கிறேன். எனக்கு அம்மாவை பார்க்க புடிக்கவில்லை..."

அன்றுதான் என் அம்மா கண் கலங்கியதைப் பார்த்தேன். எல்லாம் சும்மா வெளிவேசம் என்று எண்ணிக்கொண்டேன். நான் அன்று எங்கள் கிராமத்தை விட்டு போகும் பொழுது மரம் பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அதில் நான் செதுக்கிய இல்லை... கோபத்தில் கிறுக்கியவைகள் எல்லாம் பட்டைகள் கிழிக்கப்பட்டு புண்ணாகி, ஆறி வடுவாகி இருந்தது.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஊருக்கு செல்வதையும் குறைத்துக் கொண்டேன். அவள் அழைத்தாலும் நான் பேச மறுத்தேன். எப்பொழுதாவது அப்பாவை பார்க்க வேண்டுமென்றால் மட்டும் ஊருக்கு சென்று வந்தேன்.  ஒரு முறை தம்பி என்னை அழைத்து அம்மாவிடம் பேசு என்று எவ்வளவு சொல்லியும் "அவள் உனக்குதான் அம்மா... எனக்கு இல்லை" என்று இணைப்பை துண்டித்து விட்டேன்.

என் திருமணத்திற்கு கூட அவள் விருப்பத்தை நான் கேட்கவில்லை. எனக்கு குழந்தை பிறந்ததை கூட அறிவிக்கவில்லை. அப்பாவிற்கு மட்டும் சொல்லி வைத்தேன். அதுவும் ஒரு நிபந்தனையோடு, அம்மாவிற்கு சொல்ல கூடாது என்ற நிபந்தனையோடு.  எவ்வளவு கொடியவன் நான்...ஒரு தாய் எவ்வளவு கொடுமைக்காரியாக இருந்தாலும் ஒரு மகன் இவ்வளவு கொடுமையான தண்டனையா கொடுப்பான்?!.

எனக்கு மகன் பிறந்த பிறகு என்னமோ எனக்குள் எதெல்லாமோ எண்ணங்கள் வளர தொடங்கியது. என் மகனை இப்படி இப்படி வளர்க்க வேண்டும் என்றெல்லாம். எனக்கு என் அப்பாவை பிடிக்கும், என் மகனுக்கு என்னை பிடிக்க வேண்டும் ஆகையால் என் மகனிடம் ஒரு அப்பாவாக என் அப்பாவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன்.

ஆனால் என் மனைவி என் மகனை தண்டிக்கும் பொழுதெல்லாம் எனக்கு என்னமோ மாதிரி இருக்கும். என் தாய்தான் நினைவில் வருவாள். எனக்குள் நானே கேள்விகள் கேட்க ஆரம்பித்த நாட்கள் அதுதான். என் மனைவி என் மகனை  தண்டிக்கிறாள் என்றால் அவளுக்கு தன் மகன் மீது பாசம் இல்லையா? என் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் தூக்கம் வராமல் அவதிப் பட ஆரம்பித்தேன்.

ஆனால் என் மனைவிபோல் என் தாய் இல்லையே அடித்தாலும் இவள் அரவணைக்கிறாளே...என் முடிவு சரிதான் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். இருந்தாலும் என் மனது படும்பாடு வெளியே சொல்ல முடியவில்லை.

பல வருடங்கள் ஆகிறது எங்கள் கிராமத்திற்கு சென்று, ஒரு முறை சென்று வந்தால் உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று ஏதோ மனதிற்குள் தோன்ற, வரும் பண்டிகைக்கு ஊருக்கு சென்றுதான் பார்ப்போமே என்று முடிவு செய்துக் கொண்டேன்.

என் மனைவி, அப்பாவிற்கு புது உடையும் அம்மாவிற்கு புது சேலையும் வாங்கிக் கொடுத்தாள்.

என் வீட்டு முற்றத்தில் அந்த மரம் எப்படி இருக்கும், வெட்டி இருப்பார்களோ... அங்கே சென்றால் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது. என்னதான் கோபம் இருந்தாலும் இனி அம்மாவிடம் அதை காட்ட வேண்டாம், தம்பியும் குடும்பமும் அங்கேதான் இருக்கிறது அவன் வீட்டிற்கும் சென்றுப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்துக் கொண்டேன்.


கை பிடித்து தத்தி தத்தி நடக்கும் குழந்தையுடன் நான் என் மன்ணை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மதியம் கொளுத்தும் வெயிலில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். என்னை குறுக்கிட்டவர்களில் ஒருவர் கூட விடாமல் நலம் விசாரித்தனர்,

"பொன்னுதாயி பையனா நீ...சின்ன வயசில பார்த்தது..."

"எங்கே வேலை செய்யுறா?"

"ஒரு குழந்தைதானா?"

"அடிக்கடி ஊருக்கு வரணும் தம்பி..."

"ஏன் வீட்டிற்கு வற்றதில்லை"

"போய் அம்மாவை பாரு தம்பி..."


இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் ஏதாவது பாசத்துடனும் ஆச்சரியத்துடனும் கடமைக்காகவும் கேட்டு விட்டு சென்றனர்.

நான் முற்றத்தில் சென்று, நின்று என் வீட்டைப் பார்த்த பொழுது எனக்கு உடம்பில் புல்லரித்து உணர்ச்சிகள் மூளைக்கேறியது உண்மை.

எங்கள் பழைய வீடு எந்த மாற்றமும் கண்டிருக்கவில்லை. என்ன... சுவருகளில் கீறல்கள் விழுந்திருந்தது. சுண்ணாம்பு பூச்செல்லாம் மங்கிப்போயிருந்தது.

அந்த மரம்....முப்பது வருட பழமையான மரமாக மாறியிருந்தது. நான் உருவாக்கிய வடு காயங்கள், காலப் போக்கில் தேய ஆரம்பித்து மறைந்திருந்தது.

மரங்களின் கிளை வழியே கீச் கீச்  என்று கத்திக் கொண்டு ஓடும் அணில்களும் சிறகடிக்கும் பறவைகளின் சத்தமும் போருக்கு பின் அமைதிபோல் கிடந்த வீட்டை கொஞ்சம் கொஞ்சம் கலைத்து கொண்டிருந்தது. 

மனம் கனக்க மெதுவாக வாசல் நோக்கி நடந்தேன்.

"அப்பா...."

"யாரு..." உள்ளிருந்து அம்மா குரல் கேட்டது.

"நான்தான்..." என்றேன்.

வெளியே வந்தவள் முகத்தை பார்க்க வேண்டுமே....எவ்வளவு சந்தோசம்...எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"வாப்பா.... எப்படி இருக்கிற....அவள் வரலியா...."

"நான் நல்லா இருக்கிறேன்....அப்பா எங்கே..."

"அவரு வயலுக்கு போயிருக்காரு..." என்று சொன்னவள் என்னிடம் அனுமதி கேட்கமால் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

அதன் பிறகு மீண்டும் புறப்படும் வரை என் குழந்தை என்னிடம் தரவே இல்லை. அவள் அந்த குழந்தையுடம் விளையாடுவதை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. ஏன் இவள் என்னை மட்டும் இப்படி எல்லாம் கொஞ்சவில்லை என்று கேட்டுக் கொண்டேன்.

அப்பாவிற்கு புது உடையை கொடுத்தேன். அம்மாவிற்கு வாங்கிய சேலையை அப்பாவிடமே கொடுத்தேன்.

விடிந்தால் மீண்டும் இங்கிருந்து கிளம்பிவிடுவேன். ஒரு இரவுதான் நான் இங்கே இருக்க போகிறேன் என்று நான் இன்னும் அப்பாவிடம் சொல்லவில்லை. விடிந்த பிறகு சொல்லலாம் என்று தோன்றியதால் நான் சொல்லிக்கொள்ளவில்லை.  இரவு உணவை முடித்து விட்டு மெதுவாக நடந்து வரலாம் என்று வெளியே நடந்தேன். என் குழந்தை, வாசலில் அமர்ந்திருந்த என் தாய் கையிலிருந்தது.

திரும்பி வரும் பொழுது அந்த முற்றத்து வேம்பு மரத்தடியில் ஒரு மண்ணெண்ணை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தை மறைத்தவாறு இரு நிழல்கள் தெரிந்தது. ஒன்று என் அம்மா நிழல், இன்னொன்று பலவருடங்களுக்கு முன் பார்த்த உருவம்.

"ஏன் பொன்னுத்தாயி...இப்பதான் உன் பையன் வந்துட்டான் இல்ல...இண்ணைக்காவது வீட்டுக்கு உள்ள போய் உறங்கலாம் இல்ல..."

"அதை விடு...இதை பார்த்தியா....என் பையன் எனக்கு சீலை வாங்கிட்டு வந்திருக்கான்....இங்க பாரு எவ்வளவு அழகா இருக்குன்னு..."

"உன் சின்ன பையன் இதமாதிரி எத்தனை வாங்கி கொடுத்திருக்கான் என்னைக்காவது இப்படி சொல்லியிருக்கிறியா நீ?'

"ஹ்ம்ம்....உனக்கு ஒண்ணு தெரியுமா...." என்று சொல்லியவாறு தலையணை போல் சுருட்டி வைத்திருந்த பையிலிருந்து ஒரு சேலையை வெளியே எடுத்தாள்."

"இது என்ன சீலை போல இருக்கு..."

"ஹ்ம்ம்...என் தலை புள்ள...அதுதான் மூத்த பையன் அவன் பொறந்த உடனே  செத்து போயிட்டான்னு...." பொன்னுதாயின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"செத்துப் போயிட்டான்னு...நம்ம தர்ம ஆஸ்பத்திரிலதான்...அவன் என் சீலை முந்தானைல படுக்க வச்சிட்டு போயிட்டாங்க...எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா...வலியில அழவும் முடியாமா..."

"அழுவாத பொன்னுதாயி..."

"வலியோட அவனை அப்படியே பார்த்தேன்...அவன் கால் கட்டை விரல்லு ஆடிச்சு. எனக்கு போன உசிரு திரும்ப வந்தது மாதிரி இருந்திச்சு. அந்த சீலைதான் இன்னைக்கு வரைக்கும் தலையணையா வச்சிருக்கேன்."

"இதை அவனுக்கு தெரியுமா பொன்னுதாயி..."

"தெரியாது...நான் அவன்கிட்ட பாசத்தை காட்டாம இல்லை. சின்ன வயசில்ல கொஞ்சம் கண்டிப்பா இருந்தேன். ஏன்னா அவன் அப்பா அவன் மேல ரொம்ப பாசமா இருந்தாரு. அதனால கெட்டு போயிரக் கூடாதுன்னு. அதுக்காக அவன் மேல பாசம் காட்டாம இல்லை. அது அவனுக்கு புரியமாட்டேங்குது..."

"நீ தப்பு பண்ணிட்ட பொன்னு தாயி...இதெல்லாம் அவன் கிட்ட சொல்லி இருக்கணும்..."

"இல்லை வேண்டாம்...பாவம்... என் மேல இருக்கிற வெறுப்பிலையாவது அவன் எங்கேயோ நல்லா இருக்கான்... அப்படியே இருக்கட்டும். எனக்கு துணையா இந்த மரம் இருக்கு. அப்புறம் தலைக்கு வெச்சுக்க அவன் பிறந்து கிடந்த இந்த துணியும்...போத்திக்க இப்ப வாங்கி கொடுத்த இந்த புது சீலையும் இருக்கு... அது போதும்... கொள்ளி மட்டும் அவன் வைக்கணும்னு எனக்கு ஆசைம்மா....அவன் வற்ற வரைக்கும் என் உடம்பை எடுக்க கூடாதுன்னு அவருக்கிட்ட சொல்லி இருக்கேன்...."

நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எனக்கு ஒன்று மட்டும்தான் அவளிடம் கேட்க தோன்றியது...

"அம்மா...இன்னுமா இந்த பாவி மகனை நேசிக்கிறாய்...?"


                   -ஜெயன் எம் ஆர்

Thursday, March 15, 2012

இதழ் முத்தம்....



சிந்திவிடக்கூடாதென்று
கன்னத்தோடு என்
முத்தத்தையும் சேர்த்து
 கையணைத்தாள்...

உதடுகள்
உள்வாங்கையில்
உள்மூச்சின்
உஸ்ணத்தில்
உணர்வுகள்
உலர்ந்து விடக்
கூடாதென்று
மூச்சடைத்து நின்றாள்...

கிறங்கி நிற்கும்
கிறுக்கல்களிடையே
தளர்ந்து வீழாமலிருக்க
ஒருகாலை தூக்கி
நிலையானாள்...

கன்னம் சிவக்க
கட்டி இழுக்கையில்
கண் திறக்க
கண் மூடி நின்றாள்...

அறுசுவைகளை
ஆறவிடாமல்
ஆராந்து  உண்டு
ஊட்டினாள்...

மயக்கும் முத்தம்
வியர்க்க வியர்க்க
விதைத்தளித்தாள்...

ம்...ம் ...ம்...
என்ற எழுத்தில்
அதன் சத்தங்கள்
முத்தம் என்றன...

சத்தமில்லாமல்
என் கன்னத்தை
விடுத்தாள்...
என் இரத்த குழல்கள்
இன்னும் இன்னும்
என்றது...

அவள் உதடுகள்
என் ஈரத்தால்
வியர்த்திருந்தது...

போதும்...
போதும் ...
போதும் ...
என்றவாறு இமை
விலக்கி
கண் திறந்தாள்...

முத்தம்...
முத்தம்...
முத்தம்...
என்றவாறு  என் இதயம்
விண் நோக்கி
துள்ளியது...

மீண்டும்...
அவள் இதழ் பார்த்தேன்...

உலர்ந்த இதழை
நா நனைத்துக் கொண்டிருந்தது...

சத்தமில்லாமல்....
மீண்டும் மீண்டும்
அவளினுள்
இல்லாமலானேன்...

      -ஜெயன் எம் ஆர்

Thursday, October 27, 2011

குடை நனைக்கும் கோடை மழை....


குடை நனைக்கும் கோடை மழை....

கடந்த நான்கு நாட்களாக மழை விட்டபாடில்லை. தொலைக் காட்சிகளிலும் செய்தி தாள்களிலும் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருந்தது இதுதான். 'சென்னையில் தொடர் மழை. பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மழையை சென்னை பார்க்கிறது.'

உண்மைதான் ஏறக்குறைய தாழ்வான எல்லா பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி விட்டது. சென்னையில் சில இடங்கள், ஏரிகள் என்று உணர்த்தியது இந்த மழைதான். நேற்று வரை விளையாட்டு மைதானமாக காட்டியளித்த இடங்கள் எல்லாம் இன்று பள்ளம் விடும் அளவிற்கு நீர் நிரம்பி வழிகிறது.

இன்று புயல் கரையை கடக்கும் என்று கூறி இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு வரும் எனக்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை.

இந்த மழை நான் வருகிறேன் என்று கண்ணீர் விடுகிறதா. இல்லை ஆனந்தப் படுகிறாதா என்று தெரியவில்லை. ஆனால் ஏழு மணி நேரத்தில் வர வேண்டிய பேங்க்களூர் எக்ஸ்பிரஸ் பன்னெண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்தது ஆச்சரியம்தான். இதற்கு மேல் சென்னைக்கு இனி ரயில்கள் இன்று வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தன் மகன் வருவான், மகள், சொந்தங்கள் வருவார்கள் என்று காத்திருப்பவர்கள் பாவம்.

உண்மைதான் ரயில் தண்டாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும்பாலும் ரயில் சேவை நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சிலர் இன்னும் ரயில் நிலையத்தில் காத்திருப்பது எனக்கு தெரிந்தது. பேருந்து எதாவாது தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று சாலைக்கு வந்தேன்.

சாலை முழுவதும் நீருடன் வெறிச்சோடிக் கிடந்தது. மதுரவாயல் வரை செல்ல வேண்டும் எப்படி செல்வது இருபது மைல் தூரத்திற்கு மேல் இருக்கும் என்ன செய்யலாம் என்று திரும்பிய பொழுது ஒரு அமைதியான குரல் என்னை தட்டியது.

"தம்பி...பஸ்ஸுக்கா வெயிட் பண்ணுற...பஸ் வர டைம் ஆகும். குடையில வா.." என்று அவர் அழைத்தார்.

என் அப்பா வயது இருக்கும். மிகவும் சோர்ந்து போயிருந்தார். அந்த சோர்விலும் அவர் முகத்தில் இருந்த சாந்தம் என்னை கவர்ந்தது. குடைக்குள் சென்று நின்று கொண்டேன்.

"தம்பி..என்ன பஸ்ப்பா?"

"தெரியல ஐயா...மதுரவாயல் போகணும்.."

"ஊருக்கு புதுசா...?"

"இந்த ஊருதான்..ஆனா ரொம்ப நாள் ஆச்சு..."

"சரி வா... மெதுவா நடக்கலாம்...போற வழியில எதாவது பஸ் கிடச்சா ஏறிக்கலாம்..."

"நீங்களும் மதுரவாயல்தான் போறீங்களா ஐயா..."

"இல்லைப்பா...பக்கத்திலதான்... என் பொண்ணு வற்றா இன்னைக்கு...வற்ற வழில மழைன்னு டிரெயின்ன நிப்பாட்டிட்டாங்களாம். என்னால ஸ்டேஸன்ல ரொம்ப நேரம் உட்கார முடியல. இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆகுமாம். அதுதான் வீட்டுக்கு போயிட்டு வரலாம்ன்னு" என்று அவர் சொல்ல இருவரும் சாலை ஓரமாக மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

"ஐயா இந்த மழையில நீங்க வீட்ல இருக்க வேண்டியதுதானே..."

"எனக்குன்னு யாருமில்லை இல்லை தம்பி...என் மகள்...பாவம்...நான் அவளுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருந்தால் கூட இவ்வளவு கஸ்டப்பட்டிருக்க மாட்டா. ஆனால்..." அவர் கண்கள் கலங்கி வழிய தயாராவது எனக்கு தெரிந்தது.

"ஐயா...ஐயா...எனக்கு எதுவும் புரியல..."

"ஹ்ம்ம்...." என்று கண்களை துடைத்தவர் தொடர்ந்தார்.

"எங்களுக்கு ஒரே பொண்ணு..." என்று அவர் ஆரம்பித்த பொழுது ஏன்டா இதெல்லாம் கேட்கணுமா என்று எனக்கு தோன்றாமலில்லை.

"நாங்க அவளை ரொம்ப பாசாமா வளர்த்தோம். நல்லா படிக்க வெச்சோம். அவள் எப்பவும் சொல்லுவா...அப்பா உங்கள விட்டு பிரியவே மாட்டேன். நீங்க செத்த உடனே நானும் செத்திருவேன். அவள் அப்படி சொல்லும் பொழெதெல்லாம் எனக்கு கோபம் வரும். அதுக்காகவா உன்னை இவ்வளவு பாசத்தை கொட்டி வளர்க்கிறோம். என் பொண்ணு நல்ல பொண்ணு ஆனால் அவன் சரி இல்லை."

"அவன்னா யாரு???"

"சொல்லுறேன்பா...பசங்க வளர வளர அவங்க கூட இந்த பாழாய் போன காதலும் முளைக்க ஆரம்பிச்சிருது. என் மகளாச்சும் அதுக்கு விதி விலக்கா இருப்பான்னு பார்த்தேன்."

"தம்பி நீயும் லவ் பன்ணி இருப்பியே?"

"அது இருக்கட்டும் ஐயா...நீங்க மேல சொல்லுங்க..."

" என்ன பெரிய லவ், அவள் காதலை விட என் பாசம் பெரிசுன்னு எனக்கு தோணிச்சு. என்னால அவள் காதலை ஏத்துக்க முடியல. காதலை விட்டு வான்னேன். அது அவளால முடியல. பிறகுதான் அவளுக்கு அந்த கொடிய தண்டனை கொடுக்க ஆரம்பித்தேன்."

ஒரு அப்பா மகளுக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும், தனி அறையில்அடைத்து வைப்பதை தவிர.

"திடீர்ன்னு உன் மேல பாசமா இருக்கிறவங்க...நீ என்னை செஞ்சாலும் கண்டுக்கவே இல்லை. எப்படி இருக்கும்!. அதுதான் நானும் செஞ்சேன். தண்ணி தெளிச்சு விடுறதுன்னு சொல்லுவாங்க இல்லை. நான் நேற்று வரைக்கும் அவளுக்கு பார்த்து பார்த்து பண்ணினேன். இன்றிலிருந்து எல்லாவற்றையும் நிறுத்தினேன். அவள் சாப்பிட்டாலும் கவலை படலை. தூங்கலைனாலும் கவலைப்படலை. ஏன் ஒரு டைம் காச்சல் வந்து படுத்தப்பக் கூட நான் பக்கத்தில போகல. "

எனக்கு பக்கென் இருந்தது. ஒரு நிமிடம் அப்படியே பாதையில் நின்றேன். குடை முன்னால் நகர மழைத்துளி தலையில் விழுந்தது.

"தம்பி...மழை நனையாதப்பா, காச்சல் வந்திரும் குடைக்குள்ளே வா..." என்றதும்தான் நான் சுய நினைவிற்குள் வந்தேன்.

"ஐயா உங்க பொண்ணு பேரு என்ன" என் கேள்வி அவர் காதில் விழவில்லை. அவர் பழைய நினைவில் மூழ்கி இருந்தார்.

"தம்பி...திடீருன்னு நான் அப்படி செய்தது...அவளுக்கு இடி விழுறது மாதிரி இருந்திருக்கு. அழுதுருக்கா...நான் கவனிக்கல. எனக்கு கர்வம், என் பாசம் அவளை மாற்றும்ன்னு நெனச்சேன். என் பாசம் அவளை மாற்றியது உண்மை. ஆனால் அது என்னையும் அவளையும் இவ்வளவு தூரத்திற்கு கூட்டிட்டு போகுமுன்னு நெனக்கல. ஒரு நாள் எங்க்கிட்ட பேசணும்னா. எனக்கு ரொம்ப சந்தோசம் உன் பாசம் ஜெயிச்சிடுச்சுடான்னு மெத்தனத்தில சொல்லுன்னு சொன்னேன்.."

"அப்பா...என்னால இப்படி உங்க கூட பேசாம இருக்க முடியல...இப்படிதான் அவ முதல்ல சொன்னா. அப்போ எனக்கு சந்தோசத்தில அழகை வந்திச்சு. ஆனா.. எனக்கு உடம்பு சரியில்லாம இருந்த நேரம் கூட உங்க கல் மனசுக்கு என்கிட்ட பேச அனுமதிக்கல இல்லப்பா. ஆஸ்பிட்டல் கூப்பிட்டு போகணும்ன்னு தோணல இல்லை. உங்கள எனக்கு பிடிக்க அப்பா. என பாசம் உங்களுக்கு தெரியல இல்லப்பா. என்னை விட உங்களுக்கு என் லவ் எதிரியா தெரியுதில்லப்பா. என்னால முடியாதுப்பா. இனி உங்க முன்னாடி இருந்திட்டு டெய்லி டெய்லி இப்படி சாக முடியாதுப்பா. நாளைக்கு நான் அவரோட ஊரை விட்டு போறேன். பேங்களூர் போறேன். இனி உங்களை பார்க்க வர மாட்டேன்.

எனக்கு தூக்கி வாரி போட்டிச்சு. அவளை தடுத்திருக்கணும் அதுவும் பண்ணல. அவ அம்மா எவ்வளவு தடுத்தும் கேட்கல. போயிட்டா...போயிட்டா...அதுக்கு அப்புறம் அவள் எங்க இருக்கான்னே தெரியாம போச்சு. அவ அம்மா டெய்லி வருவா வருவான்னு வாசலை பார்த்து பார்த்தே செத்து போயிட்டா...என் பொண்டாட்டியோட கடைசி ஆசையைக் கூட நிறைவேத்த முடியாம போச்சு. பத்து நாளைக்கு முன்னாடிதான் அவள் மும்பைல இருக்கிறதா அவள் பிரண்டு ஒருத்தி போன் பண்ணிச் சொன்னா, என் மகளை நான் விட்டிருக்க கூடாது. அந்த படு பாவி இவளை ஏமாத்திட்டானாம். கடைசி வரைக்கும் வரவே இல்லையாம். வேற வழியில்லாம, திரும்பி வரவும் மனமில்லாம பாவம் என் பொண்ணு பேங்களூர்க்கு டிரெயின் ஏறி இருக்கிறா. பிறகு மும்பைக்கு போயிட்டாளாம்"

"ஐயா...அழாதீங்க சார்...உங்க பொண்ணு பேரு என்ன ஐயா?"

"தம்பி... இன்னைக்கு என்ன கிழமை தெரியுமா...என் பொண்ணு என்னை விட்டு ஓடி போன நாள். அக்டோபர் பத்து."

"அக்டோபர் பத்து...." என் தலை மேல் இடியே விழுவது போலிருந்தது. மனம் மரத்துப் போய் அப்படியே நின்றேன்.

"ஐயா.... உங்க பொண்ணு பெயரு என்ன?" என்று நான் கத்தியது அவர் காதில் விழாதது போலவே நடந்தார். நான் அப்படியே மழையில் நின்று கொண்டிருந்தேன்.

"மலர்..உன்னை பார்க்காம நான் சாக மாட்டேன்..."

"மலர்...மலர்..." என் கையிலிருந்த பை கீழே நழுவியது. அவர் கையிலிருந்த குடையையும் காணவில்லை. நான், அவர் நகர்ந்து செல்வதை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன். அவர் புலம்புவதன் ஒலி மெதுவாக குறைய ஆரம்பித்தது.

"மலர்...என் மகளே....நான் தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா... எல்லாவற்றையும் மறந்து உனக்கு ஒரு கலயாணத்தை பண்ணு பார்த்த பிறகுதான் கண் மூடுவேன். மலர்...அந்த படுபாவி...."

மலரின் அப்பா கண்முன்னாடியே நடக்க சத்தும் மட்டும் மங்கி போனது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஓடினேன்...

திரும்பி ரயில் நிலையத்திற்கு ஓடினேன். நான்கு வருடம் அவளை தேடாத இடமில்லை. கேட்காத ஆளில்லை. அவள் அப்பாவிற்கே தெரியாமல் பல முறை அவருக்கே தொலைபேசியில் பேசி இருக்கிறேன். பேங்களூர் போனாள் என்பதை தவிர எதுவும் தெரியாமால் எவ்வளவு கஸ்டப்பட்டேன்.

அந்த அக்டோபர் பத்து, அன்னைக்கு நான் ஏன் வரமுடிவில்லை என்று அவளிடம் சொல்ல கூட முடியாம இத்தனை நாள் எவ்வளவு கஸ்டப்பட்டேன். உண்மையை சொன்னா கண்டிப்பா என்னை அவள் ஏத்துப்பா. ஏத்துகலைனா...கால்ல விழுந்து பிச்சை கேட்பேன்...என்னை ஏத்துக்க சொல்லி...

 நான் சென்று ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டேன். மழை மட்டும் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

-ஜெயன் எம். ஆர்

_

Thursday, September 15, 2011

My 6th book has been published by sangapalagai


My 6th book  has been  published by sangapalagai. U can buy the book from www.sangapalagai.com

Book Deatils:-
Price of the book : $3.99 (Rs.180/-)
No of Pages             : 190

Thursday, September 1, 2011

மாற்றான் தோட்டம்...

"டேய் நல்ல மூங்கிலா பாரு டா..."

"அதுதான்டா தேடிட்டு இருக்கேன்..."

"இங்க பாரு...ரோட்டுக்கு  இந்த பக்கத்தில இருந்து அந்த பக்கம் வரைக்கும் போகணும். .."

"பெரிய மரம் எல்லாம் தள்ளி நிக்குது டா..."

"அங்க போய் பாரு...நல்ல வழையணும்...பட்டுன்னு போயிட்டு வரணும்..."

"இங்க பாரு இது போதுமா?"

"நல்லா இருக்கு...பக்கத்தல இருக்கற அந்த மா மரம் வழியா மேல ஏறு..."

இருவரும் லுங்கி அணிந்திருந்தனர். சில வாரம் சவரம் செய்யாத தாடி...ஒருவன் காக்கி நிற  அரைக் சட்டை அணிந்திருந்தான். மற்றொருவன் வெறும் கருப்பு நிற பனியன் மட்டும் அணிந்திருந்தான். சட்டை அணிந்திருந்தவன் அவனை மணி என்றும் பனியன் அணிந்திருந்தவன் அவனை மூர்த்தி என்றும் அழைத்து கொண்டனர்.

மூர்த்திதான் அந்த மாமரத்தில ஏறிக்கொண்டிருந்தான்...

"சத்தம் போடாம ஏறுடா..."

"நீ ஏன்டா பயப் படுற. இந்த இ சி ஆர் ரூட்ல அதுவும் இவ்வளவு அவுட்டர்ல யாருக்கு கேட்க  போகுது..."

"டென்சன் பண்ணாத...நாம என்ன பஞ்சாயத்து பண்ணவா வந்திருக்கிறோம்...மூடிட்டு வேலைய பாரு..."

அதன் பிறகு மூர்த்தி எதுவும் பேசாமல் மரத்தின் வழியாக மூங்கிலின் மேல் முனைக்கு ஏறினான்.

"பார்த்து... எட்டி மூங்கில பிடி.... பார்த்துக்கோ மூர்த்தி பச்சையா இருக்கிற எதையும் கை வெச்சு உடைக்காத..."

மூர்த்தி ரொம்ப மெதுவாக கவனமாக எட்டி மூங்கிலை பிடித்தான்.

"இப்ப, குதி டா..."

"எந்த பக்கம் குதிக்குறது?"

"பார்த்துடா பதுனஞ்சு அடிக்கு மேல இருக்கும்... மூங்கில் மேல இழுக்கும்... கையை மட்டும் விட்டிராத.." என்று மணி சொல்ல மூர்த்தி பதட்டத்தோடு கீழே  குதித்தான்.

மணிக்கும் மனதில் திகில் குடி கொண்டது... மூர்த்தி குதித்து கீழே வந்ததும் மணி ஓடி சென்று மூங்கிலை பிடித்து கொண்டான்..

"டேய் எழுந்து அந்த கயிறை எடுத்து மூங்கிலை கெட்டுடா.." என்றதும் மூர்த்தி எழுந்து வந்து மூங்கிலின் கொண்டை பகுதியை கயிறால் இழுத்து கட்டினான்.

"கயிறை இழுத்து அந்த மரத்தில கட்டு டா... புடிக்க முடியல..."

"இழுக்க முடியல மணி..."

ஒரு வழியாக மரத்தில் கயிறின் முனையை கட்டிய பின்னர் . மணி மரத்திலிருந்து கையை எடுத்தான்..

"மூர்த்தி நல்ல இழுத்து கட்டினாத்தான் சரியா இருக்கும் . நான் இனி எதையும் யோசிக்கறதுக்கில்லை. இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கும் பட்டு பட்டுன்னு முடிச்சிட்டு கெளம்பணும் ..."

"மணி... நம்பர் கரக்டுதானே 5890 நம்பர் மாறிர கூடாது..."

"கண்டிப்பா மாறது... " வெறியால் பல்லை கடித்துக் கொண்டான் மணி.

நேற்று வரை மணி ஒரு கோபக் காரன்தான். ஆனால் இப்படி ஒன்று செய்யலாம் என்று இதுவரை அவன் எண்ணியதில்லை.

"சத்தியமா சொல்லுறேன் அவ மேல உசுரையே வெச்சிருந்தேன் சார்...எப்படி பார்த்துகிட்டேன் தெரியுமா...ஒரு புருசனா தாங்குனேன். எல்லாரும் என்னை பொண்டாட்டி தாசன்னு சொல்லுவாங்க சார்... இப்ப பாருங்க அவள்னால நான் என்ன நிலைமைக்கு வந்திருக்கேன்.

ரெண்டு வருஷம் ஆகுது சார் எங்களுக்கு கல்யாணம் ஆகி. அவளால ரெண்டு வருஷம் என்னோட எப்படி குடும்பம் நடத்த முடிஞ்சுதுன்னு தெரியல. கல்யாணத்துக்கு முன்னாடியே செத்திருக்க மாட்டேனான்னு தோணுது. இருட்டில்தான் நான் அவனை பார்த்தேன். அவன் முகம் கூட எனக்கு பதியாம போச்சு. என் பொண்டாட்டியும் அவனும் பேசுறது நான் கேட்டேன் சார். இரண்டு மாசமா அவ என்னை ஏன் தொட விட மாட்டேன்றான்னு அப்பத்தான் தெரிஞ்சுது. அதை கேட்ட உடனே எனக்கு ஏன் கார்ட் அட்டாக் வரமா இருந்திச்சு தெரியல...உங்கள பார்க்கணும்ன்னு ஆசைப் பட்டேன். அதுதான் இன்னைக்கு வந்தேன். நான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுறேன், அப்புறமா நான் என்ன சொல்லுறதுன்னு நீங்க சொல்லுங்க...

எனக்கு குழ்ந்தை இல்லைன்னு நினச்சு நினச்சு என் அப்பா அம்மா ரொம்ப முடியாம ஆயிட்டாங்க. எனக்கு கடவுள் கொடுத்தது அவ்வளவுதான் நெனச்சிருந்தேன். ஆனா உண்மை அது இல்லை சார். என் கொளந்தைய அவ கொன்னுருக்கா. அவ கருவை கலச்சிருக்கா. இதை கேட்டதில இருந்து எனக்கு
அவளை கொலை பண்ணனும் போல இருக்கு.

போன வாரம் சார் ரெண்டு பேரும் பேசுறது நான் கேட்டேன் சார். அந்த டைம் வெளிச்சம் கம்மியா இருந்திச்சு அவன் முகத்தை பார்க்க முடியல...என்ன பேச்சு பேசுனான் அவன் தெரியுமா சார்...

"இங்க பாரு அபிராமி..." அபிராமிதான் என் பொண்டாட்டி பேரு சார்.

"இங்க பாரு அபிராமி, நாலு வருஷம் வெயிட் பண்ணியாச்சு. இனியும் என்னால முடியாது. "

"எனக்கு மட்டும் அந்த ஆளோட வாழணும்னு ஆசையா என்ன...நீ சொன்னதுக்காகத்தானே என் வயித்ல இருந்த ஆறு மாச கொளந்தையும் கலச்சேன்...."

சொல்லுங்க சார் ஒரு புருசனுக்கு காதுல இப்படி கேட்ட எப்படி இருக்கும். கதறி கதறி அழுதேன் சார்...

"கொளந்தைய கொன்னதுக்கு இன்னும் அந்த ஆளுக்கு சந்தேகம் வரல வந்திச்சு அவ்வளவுதான். பொறுமையாதான் பண்ணணும். அவசர படாத...சுத்தம் சுத்தமுன்னு சொல்லுரறேன்னு அவனை என் பக்கத்தில படுக்க கூட விடுறதில்லை. இப்படி ஒடம்பு சரில்லை சரியில்லைன்னு எத்தனை நாள் சாமளிக்க  முடியும். இன்னும் ஒரு வாரம்தான்...எல்லாம் ரெடி பண்ணி தயாரா வை..."

இப்ப சொல்லுங்க டாக்டர் சார் நான் என்ன பண்ணணும். இன்னும் ஒரு வாரத்தில அவ அவனோட ஓடி போவா..நான் என்ன செய்யணும்.. எதிரில் இருந்த டாக்டரிடம் கேட்டான் மணி...

"இது எங்கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது. நான் டாக்டர்...எனக்கு எப்படி பதில் தெரியும்..."

"உங்களுக்கு தெரியும் சார்.நீங்க நெனச்சா செய்யலாம்..."

"எனக்கு தெரியாது....நீங்க ஒண்ணு பண்ணுங்க உங்க ஒய்ப் கூப்பிட்டு பேசி பாருங்க..."

"சார் என் பொண்டாட்டிய இங்க கூப்பிட்டு வரவா?"

"நான்தான் சொன்னேனே, நான் வக்கீல் இல்ல டாக்டர்...இங்க எல்லாம் கூப்பிட்டு வரவேணாம்..."

"சரி டாக்டர்..." என்று எழுந்த மணி, அறையின் மேல் சுவற்றின் தொங்க விட்டிருந்த மின் விசிறியைப் பார்த்தவாறு, "டாக்டர்...என்ன கரண்ட் இல்லையா? இப்படி உங்களுக்கு வியர்குது.." என்றவாறு கையை காட்டி விட்டு வெளியே வந்தான்.

"மூர்த்தி...கயிறு நல்ல ஸ்டாரங்கா இருக்கு. நீ போய் அங்க நில்லு. கரக்டா வளைவில வண்டி திரும்பவும் மூங்கில விடணும். வளைவுங்கிறதுனால வண்டி இடது பக்கம் ஏறி வரும் ...முடிச்சிரலாம்... நீ வண்டிய பாரு நம்பர் 5890. பின்னாடி எவனும் வரலைனா அவனுக்கு நல்லது..."

மூர்த்தி வளைவில் மறைந்தவாறு நின்று கொண்டான், அடுத்த எட்டாவது நிமிடம்,

"5 ..8 ..9 ..0 ... மணி வண்டி வருது டா..." என்று குசு குசு குரலில் சொல்ல, மணி வேகமாக இயக்கினான். அவன் குறித்து வைத்த அடையாளத்தை வண்டி அடையவும் கயிறை அவிழ்த்து மூங்கிலை விடுவித்தான்.

மூங்கின் குணத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தான் மணி. இழுத்து கட்டிய மூங்கில் எதிர் புறமாக, சாலையை நோக்கி   வேகமாக சென்று, விரைவாக வந்து கொண்டிருந்த காரின் கண்ணாடியில் மோதியது. அதன் பிறகு என்ன ஆகும் கார் தடுமாறி ஓரமாய் மோதி நின்றது.

"மூர்த்தி பத்து நிமிஷம் வெயிட் பண்ணு...உடனே போக வேண்டாம்..."

பத்து நிமிடத்திற்கு பிறகு சென்று எட்டிப் பார்த்தனர்.

"மணி ரெண்டு பேரும் அவுட்..."

"இனி போய் குளிக்கணும் டா...எல்லாத்தையும் மறந்திரு. . . என் பொண்டாட்டிக்கு நான் குடுத்த தண்டனைடா இது..."

"அங்க பாரு...அந்த டாக்டரோட கண்ணு உன்னையே பாக்குறது மாதிரி இருக்கு இல்லை..." என்று மூர்த்தி  அந்த டாக்டரை சுட்டிக் காட்ட, மணி அவன் கண்களில் கட்டிய நீரை ஓரமாய் விரல்களால் தட்டி விட்டவாறு நடந்தான்....

- ஜெயன் எம் .ஆர்  

Friday, August 12, 2011

சுகந்திரம் அடைந்து விட்டோம்????


காசுக்கு முழமிடும் காவலாளிக்கு 
இன்னும் உள்ளம் கை 
அரிப்பது குறையவில்லை...

இப்பொழுதெல்லாம் 
சற்றுமுன் தகவலில்
தவம் என்று தரம் 
மாறும் சாமிகளின் 
பெயர்தான் மின்னுகிறது...

காலம் கெட்டுக்கிடக்கிறது 
என்று புலம்பும் எங்கள் 
வீட்டு தாய்மார் 
பாட்டிமார்கள் வாய் 
இன்னும் அடங்கியதாக 
தெரியவில்லை....

தேச பிதாவைத் தொடர்ந்து 
அம்மா, அன்னை, அண்ணன் 
என்று நீண்டு கொண்டே போகிறது 
அடை மொழிகள்...

சுனாமியும் அடை மழையும்  
வாசல் தெளிக்கும் 
எங்கள் குடிசைகளின் கூரைகளில்
இலவசங்கள் எல்லாம் 
அனுமதி இல்லாமல் 
அணி வகுத்து நிற்கிறது...

மாற்றம் கேட்டும் 
எம் மக்களுக்கு 
மாறிவருவது ஆட்சியும் 
கட்சியும்தான்...


மூன்று, இரண்டு என்பது
இப்பொழுது நாமிருவர்
நமக்கொருவர் என்றாகியும்
கோடிகளில்தான் புரள்கிறது
மக்கள்தொகை விவரம்...

ஜாலியன் கொலைகள் 
தடுக்க என்கவுண்டர் 
சட்டம் ஏற்றி ஆகியும் விட்டு ...

ஆனாலும் நாம் 
சுகந்திரம் அடைந்துவிட்டோம்???

விடுமுறைக்காவே நினைவிலிருக்கிறது
நம் ஆகஸ்ட் பதினைந்து ...

இனிப்புடன் கொண்டாடுவோம்...

சுகந்திர தின வாழ்த்துகள்....

             -ஜெயன் எம். ஆர்




Tuesday, August 9, 2011

திருமண வாழ்த்து...



பனி விழுங்கும் பகலும்  
படுத்துறங்கும் இரவும் 
வழிவிடும் மாலையும்
மாலையிடும் காலையும் 
சொல்வது ஒன்றுதான்,
இயற்கையின் மண நாள் இன்று...

என்னில் அவன் விழுந்ததால் 
நான் பகலானேன் என்று பனித்துளியும்,
என் உயிரை எடுத்துக் கொண்டதால் 
இரவானேன்  என்று பகல் பொழுதும், 
மாலை வழிவிட விடிந்தேன் 
என்று காலையும்...
உவமையையும் உருவையும் சேர்த்து
தாம்பத்தியம் இதுதான் என்று 
விதம் விதமாய்  பதிலளிக்க,
ஒன்று கூடி வாழ்த்துரைக்க,
நானும் கூறுகிறேன் 
ஒரு புன்னகை வாழ்த்து...

மனமிணையும் மண நாளில் 
புன்னகையாய் என் வாழ்த்துக்கள்...

-ஜெயன் எம். ஆர்

Monday, August 1, 2011

காதலித்தேன்...காதலி தேன்...





எறும்புகள் சாரை சாரையாய் 
செல்வதை பார்த்ததும் 
அதன் வழியில் கை வைப்பாள்...

அது விலகி மீண்டும் 
வரிசையாய் செல்வது 
எவ்வளவு அழகாக இருக்கும்
தெரியுமா????  என்பாள்...

சொல்லிச் சொல்லி 
விரல் வைத்தாள்....

என்ன ஆச்சரியம்!!!
எறும்புகள் அவள் விரலை 
சுற்றி சுற்றி வந்தது...

           -ஜெயன் எம் ஆர்

Thursday, July 28, 2011

டாஸ்மார்க் பெஞ்ச்...



எப்பொழுது ஆறு மணியாகும் என்று பார்த்து கொண்டே இருப்பான். ஆறு மணியை கடிகார முட்கள் தொட்டதும் வேக வேகமாக வண்டியை எடுப்பான். நேராக போகிற வழியிலிருக்கிற டாஸ்மார்க்குள் செல்வான். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வருவான். அவன் வெளியே வரும் கோலத்தை பார்த்தாலே தெரியும், அவன் எட்டு காலில் இல்லை பல நூறு காலில் வருகிறான் என்று. டாஸ்மார்க்குக்குள் நுழையும் பொழுது அலுவலகத்திற்கு எப்படி சென்றானோ அப்படியே மடிப்பு கலையாமல் இருப்பான். ஆனால் வெளியே வரும் பொழுது... அவன் எப்படி வெளியே வருகிறான் என்று அவன் இதுவரைக் கண்டதில்லை.  அதன் பிறகு மீண்டும் குடி போதையில் வண்டியை பாம்பை விட மோசமாக ஓட்டி செல்வான். மொத்தத்தில் அகிலன் மாலையானால் மதுலோகத்தில் குடிமகன். கொஞ்சமில்லை, தினமும் ஒரு அரை பாட்டிலையாவது காலி செய்து விட்டுதான் வெளியே வருவான். அதுவும் எதாவது நண்பர்களை கிடைத்து விட்டால் அவன்தான் அகிலனை வீடு கொண்டு வந்து சேர்ப்பான்.

ஏன்டா குடிச்சு உடம்ப கெடுத்துகிறேன்னு கேட்க்கிற அவன் அப்பா, அம்மா மற்றும் நெருக்கமானவர்கள் யாருக்கும் என்ன காரணுமென்று தெரியாது.

வயசு முப்பத்து ரெண்டு ஆகுதில்லை, மாசம் மாசம் எவ்வளவு சம்பாதிக்கிற எல்லாத்தை இப்படி குடிச்சு அளிக்கிறியேடான்னு பொலம்பும் அப்பாவிற்கும் தெரியாது.

அய்யா உங்க பையனுக்கு நல்ல வரன் ஒண்ணு வந்திருக்கு பார்க்கலாமான்னு கேட்கும் தரகரை கோபத்தில் அடிக்க செல்லும் அகிலனின் அப்பாவைப் பார்த்து சுற்றத்தார் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தெரியாது.

அத்தனை கேள்விகளும் அகிலன் மட்டும்தான் பதில்... அடிக்கடி மனசிற்குள் நினைப்பான்...தண்ணியடிப்பதை எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்று. ஆனால் அடுத்த நொடியே, நான் ஏன் வாழ வேண்டும் என்று மனசு மாறி விடும்.


இன்று புதன் கிழமை, மாலை ஆறு மணிக்கு அலுவலகம் முடியும் என்று எதிர்ப் பார்த்த அவனுக்கு வந்த திடீர் வேலையினால் மணி ஏழைத்தாண்டிதான் வெளியே வர முடிந்தது.

எப்பொழுதும் செல்வதை விட இன்று வேகமாக வண்டி பறந்தது. வாய் நம நமன்னு நமத்தது...

ஆதம்பாக்கம் டாஸ்மார்க் கொஞ்சம் சுத்தமாகவும், நிறைய கூட்டமாகவும் இருக்கும். ஒரு ஓரமாய் இருந்த மேசையைப்பார்த்தான். இதற்கு முன்னால் வந்து மது அருந்தி விட்டு சென்றவர்கள் விட்டு சென்ற பாட்டிலும் இதர குப்பைகளும் மேசை மேல் கிடந்தது. அதை தொடாமல் "சுரேஸ்...' என்று குரல் கொடுத்தவாறு இருக்கையில் அமர்ந்தான். சுற்றி முழுவதும் போதையில் உளரல் சத்தம் காதை கிளித்தது. ஆனால் அது அவனுக்கு புதிதாக இல்லை என்பதால் அவன் கவனம் அதில் செல்லவில்லை.

அந்த டாஸ்மார்க்கில் வேலை செய்யும் சுரேஸ் அகிலன் குரலை கேட்டதும் அருகில் வந்தான்,

"என்ன சார்...இன்னைக்கு இவ்வளாவு லேட்...."

"ஆமப்பா...சரி...ஒரு ஆஃப் மார்பியஸ்... அரை லிட்டர் செவன் அப்... ஒரு பாக்கெட் கிங்க்ஸ்..."

"சார்..சைடிஸ்...'

"எத்தனை தடவை உங்ககிட்ட சொல்லுறது..."

"சரி சார்... எப்பவும் சாப்பிடுற தலை கறியே எடுத்திட்டு வற்றேன்..."

"ம்ம்.. முதல்ல டேபிள்ள கிளீன் பண்ணு..."

"சரி சார்..." சுரேஸ் அவன் வேலையில் மூழ்கினான். அகிலன் மனம் மது அருந்தும் முன் தினமும் தன்னை நினைத்து வருந்தும்...

"ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாத இருந்த நான் இப்படி ஆயிட்டனே. . ."

கொஞ்ச நேரத்தில் சுரேஸ் கையில் மது பாட்டிலும் இதர பொருட்களுடனும் வந்தான்.

"தம்பி வெச்சிரு...."

"சரி சார்...எதாவது வேணும்ன்னா சொல்லுங்க..."

"தீப்பெட்டி..."

அகிலன் மது பாட்டிலை ஓப்பன் செய்து  பிளாஸ்டிக் டம்பிளரில்  காலளவிற்கு நிறைத்து அதுனுடன் குளிர் பானத்தை கலந்தான். பிறகு அதை அருந்துவதற்கு முன் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான். மூன்று நான்கு இழுப்பிற்கு பின் அதை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றி இடது கைக்கு கொண்டு சென்றான். மீண்டும் வலது கையில் மது டம்பிளரை எடுத்தான்.

எடுத்து வாயில் வைத்ததுதான் உண்டு பட்டென்று ஒருவன் அகிலன் கையில் வந்து விழுந்தான். மது டம்பிளர் கையிலிருந்து எகிறியது. கோபத்தில் அவன் சட்டையை பிடித்து அடிக்க கையும் எடுத்து விட்டான்,

"சார்..அவன  சாகடிங்க சார்...டெய்லி தாங்க முடியல..." அவனுடனும் இவனுடன் மது அருந்த வந்தன்  போல் தெரிகிறது. கோபத்தில் திட்டி விட்டு வெளியே செல்றான். அதற்கு மேல் அவனை அடிக்க அகிலனுக்கு தோன்றவில்லை. அவனுக்கு என்ன பிரச்சினையோ...

"சார்...உக்காருங்க..." என்று எதிலிரருந்த இருக்கையை அகிலன் அவனுக்கு காட்டினான்.

"நீங்களும் என்னைப் போலதான் போல தெரியுது. சரக்கு இல்லாம தூங்க மாட்டீங்க போல...உங்க பேரு என்ன சார்...."

"பாஸ்கர்...சரக்கு இல்லாம தூங்க மாட்டேன்...பொண்டாட்டி இருந்தா தூங்க மாட்டேன்...ராட்சசி...ராட்சரி என்னை வாழ்கையே நரகமா ஆகிட்டா சார்..." போதையில் நாக்கு குளற குளறா சொன்னான் பாஸ்கர். இன்னும் கொஞ்சம் விட்டா  அழுது விடுவான் போல தெரிந்தது. இதற்கிடையில் சுரேஸ் புது டம்பிளரை கொண்டு வைத்தான்.

"சுரேஸ் இன்னொரு டம்பிளர் கொடு...." என்று கேட்டவாறு கையிலிருந்த டம்பிளாரில் மதுவை ஊற்றினான்.

"சார் இதை குடிங்க..."

"வேணாம் சார்.."

"பறவாயில்லை சார்..." என்று அகிலன் டம்பிளரை பாஸ்கர் கையில் திணித்தான். அதை வாங்கிக் கொண்டான் பாஸ்கர்

"சார் நீங்க..."

"டம்பிளர் வரட்டும்...ம்ம... நீங்க சாப்பிடுங்க...."

பாஸ்கர் கண்களை மூடிக் கொண்டு கப் கப்பென்று அடித்தான். அடித்தவன் டம்பிளரை படார் என்று மேசையில் எறிந்து விட்டு ஓவென்று அழ ஆரம்பித்தான்.

"எப்படி இருந்தேன் தெரியுமா சார்... அவதான் வேணும் வேணும்ன்னு மூணு வருசம் சார்..ஓ..ஓஓஓஓ..." போதையில் பேச்சைவிட அழுகைதான் அதிகமாக வந்தது.

"அழாதீங்க சார்..."

பாஸ்கர் கண்களை துடைத்துக் கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தான்,

"பின்னாடி திருஞ்சேன்...இவரே...உங்க பெயரு என்ன?"

"அகிலன்..."

"ஓ..ஐ ஆம் பாஸ்கர்..." என்று கையை நீட்டினான் பாஸ்கர்.

இன்னும் ஒரு ரவுண்ட் கூட அடிக்கல, இப்ப ரொம்ப முக்கியம் இந்த அறிமுகம் என்று நினைத்துக் கொண்டான். இதற்கிடையில் சுரேஸ் புது டம்பிளரை எடுத்து மேசையில் வைத்தான்.

"அகிலன்... சார் எதுக்கு சார்??? உங்கள...இல்ல இல்ல...உன்னை நண்பான்னு கூப்பிடவா?"

இது எல்லாம் டெய்லி நடக்கிறதுதானே என்று அமைதியாக இருந்தான்.

"சொல்லுங்க பாஸ்கர்..."

"சொல்லுடான்னு சொன்னாதான் சொல்லுவேன்..."

"சொல்லுடா...இப்ப சொல்லு..."

"ஹெம் ஹெம் ஹெம்...." மீண்டும் அழ ஆரபித்தான்.

"பாஸ்கர்...ரொம்ப லவ் பண்ணுனேன்...கல்யாணம் வரைக்கும் சூப்பரா இருந்தா. அதுக்கப்புறம் அவ பண்ணுற வேலை இருக்கே..."

"என் பேரு அகிலன் நண்பா...உன் பெயருதான் பாஸ்கர்" என்று தவறை திருத்தினான் அகிலன்

"இண்ணைக்கு தண்ணி அடிச்சிட்டு போறேன் இல்லை. வீட்டுக்கு போனா அடிதான்...என்னாலயும் அடிக்க முடியும்... பாசம் சார்.. சாரி...பாசம் டா...தெளிவா போனா...சொல்லவே வெக்கமா இருக்கு...பழைய படத்தில எல்லாம் வற்றது மாதிரி சட்டைல முடி இருக்கா...மல்லி பூ வாசனை எல்லாம் வருதான்னு செக் பண்ணுறா...எப்ப பாரு சண்டை....யாரோடையும் பேச முடியல....எதுவும் பண்ண முடியல...ரெண்டு டைம் யாருக்கும் தெரியாம சாகலாம்ன்னு டிரை பண்ணுனேன் ஆதுவும் முடியல...உன்னால என்னடா முடியும்னு..."என்று மீண்டும் அழ ஆரம்பித்தான். இதற்குமேல் தாங்க்காது என்று அகிலன் முதல் சுற்று மதுவை எடுத்து வாயில் வைத்தான்.

"அழதா பாஸ்கர்..."

"அகிலா உனக்கு என்ன பிரச்சினை..."

"எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை பாஸ்கர்....நீ மேல சொல்லு..."

"என்ன தப்பா நினைக்க கூடாது...இன்னொரு ரவுண்ட் ஊத்துடா..."

"இப்பவே ரொம்ப ஓவர்..."

"எனக்கு வேணும்... இல்ல... அழ ஆரம்பிச்சிருவேன்..."

இவன் உண்மையா அழுறானா?.. இல்லை சரக்குக்காக அழுறானா? என்று மனதிற்குள் கேட்டவாறே அடுத்த சுற்றிற்கு மதுவை அவன் டம்பிளரில் ஊற்றினான் அகிலன்.

"சார்...ஒரு தடவை அவளை கொல்ல கூட டிரை பண்ணுனேன். ஆனா தப்பிச்சிட்டா...சத்தியமா அவ மனிசியே இல்லை. சாப்பாடு கூட கொடுக்க மாட்டேங்கிறா...சமைக்க சொன்னா ஹோட்டல வாங்க சொல்லுறா..."

இப்படி போதையில் அழுது அழுது எதேதோ சொல்ல ஆரம்பித்தான். அவன், அவன் மனைவியை பற்றி சொல்ல சொல்ல ஒரு பெண் ஒரு கணவனை இவ்வளவு கொடுமை செய்வாளா என்று எண்ண தோன்றியது. தோன்றியது என்ன எண்ணிக் கொண்டான் அகிலன். அவன் அழுது அழுது போதையில் மண்ணில் விழும் முன் அகிலன் மீதி மதுவை முடித்தான். அதற்குள் சுரேஸ்,

"சார் டைம் ஆயிடுச்சு சார்..."

"சரி பில்லை குடு...."

சுரேஸ் பில்லை அகிலனிடம் நீட்டினான். ஆனால் பாஸ்கர்,

"நண்ண்ண்பபா...பில் நான் தான் குடுப்பேன்...."

"சீ சும்மா இரு நான் பாத்துக்கிறேன்..."

"அப்படினா நான் கடையை விட்டு போக மாட்டேன்...' என்று தள்ளாடியபடி பாக்கெட்டிலிருந்து பர்ஸ்ஸை எடுத்து அகிலன் கையில் திணித்தான்.

"ஐயோ.."என்று தலையில் அடித்துக் கொண்டு பர்ஸ்ஸைத் திறந்தான்.

"பாஸ்கர்...இதுதான் உன் ஒவ்ப்பா?...பாசமில்லைன்னு சொல்லுற...புடிக்கலேங்கிற...ஆனா பர்ஸ்ல போட்டோ எல்லாம் வெச்சிருக்ற?"

"இல்லை அதுக்கும் சண்டை போடுவா... நான் காசு செலவு செய்யும்போ எல்லாம் அவ இன்னும் சாகல உயிரோடதான் இருக்கிறேன்னு ஞாபகத்திற்கு வரணுமாம்...ராட்சஸிஸிஸி..." என்று இழுத்தவாறு தரையில் சாய்ந்தான்.

"பாஸ்கர் நீ கடவுள் டா...சாமிடா...." கண்கள் கலங்க சொன்னான் அகிலன்.  மேலும் அவனை அதே இடத்தில் விட்டு செல்ல அவனுக்கு மனசு வரவில்லை.

"சுரேஸ் இவனை கார் வரைக்கும் ஆக்கி குடு...." என்று இருவருமாக காரில் ஏற்ற, மெதுவாக வீட்டை அடைந்தான். பாஸ்கர் போதையில் உளறிக்கொண்டே வந்தான். முதல் முறையாக ஒருவனை அவன் தூக்கி வருவதைப் பார்த்து அம்மா அதிர்ச்சியில் நின்றாள்...இதுவரைக்கும் அகிலனைத்தான் யாராவது தூக்கி வருவார்கள்.

விடியற்காலையில் எப்பவும் போல் இன்றும் எழுந்து அமர்ந்தான். அப்பொழுது காலை ஏழு மணியிருக்கும். பாஸ்கரும் அவன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான்.


"சார்..அகிலன்..."

"ஆமா...சார்...உங்க வீட்டிற்கே கூட்டிட்டு வந்துடீங்களா..."

"எத்தனை தடவ கேட்ட பிறகும் நீங்க உங்க அட்ரஸ்...சரி அதை விடுங்க..."

"இதுவரைக்கும் என்னை அப்படியே விட்டு போயிருவாங்க அகிலன். காலையில மூணு மணிக்கு எந்திருச்சு வீட்டுக்கு போவேன். பக்கத்திலதான் வீடு. ஆதம்பாக்கம்...நீங்க நல்லவரு..."

"சரி பிறஸ் பண்ணுங்க. ஒண் அவர் முன்னாடி கிளம்பிறேன்..உங்கள டிராப் பண்ணிட்டு போறேன்..."

"ஹ்ம்...ஒண்ணு கேக்கணும் நீங்க ராத்திரி என்னை ஏன் கடவுள்டான்னு சொன்னீங்க..."

"சும்மாதான்..."

"சும்மா எல்லாம் இருக்காது...."

"என் நிலைமையை பார்த்துதானே???"

"அதுவும் உண்டு..."

"அப்புறம்..."

"கண்டிப்பா சொல்லணுமா?"

"சொன்னா தெரிஞ்ச்சுப்பேன்..."

"உங்க ஒய்பை ஆறு வருசம் ஒண் சைடா லவ் பண்ணுனேன்... அவளை கல்யாணம் பன்ண முடியலேன்னுதான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன். உங்க மேரேஜ் ஆல்பத்தில பாருங்க நான் இருப்பேன்..."

இடையில் குறுக்கிட்ட அம்மாவைப் பார்த்து அகிலன்,

"அம்மா..இனி சத்தியமா தண்ணியடிக்க மாட்டேன்...அப்புறம் எனக்கு பொண்ணு பாருங்க" என்று கூறிவிட்டு பாஸ்கர் முகத்தை பார்த்தான் அகிலன்.

“அடப்பாவி தப்பிச்சிட்டியேடா..." என்று பாஸ்கர் சொல்லியது அகிலன் காதுகளுக்கு கேட்கவில்லை என்றாலும் மனதில் கேட்டது.


                                -ஜெயன் எம். ஆர்